பகத்சிங். குடி அரசு - தலையங்கம் - 29.03.1931 

Rate this item
(0 votes)

திரு. பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைப்பற்றி அனுதாபங்காட்டாதார் கள் யாருமே இல்லை. அவரை தூக்கிலிட்ட காரியத்திற்காக சர்க்காரைக் கண்டிக்காதவர்களும் யாரும் இல்லை. அதோடு மாத்திரமல்லாமல் இந்தக் காரியம் நடந்து விட்டதற்காக திரு. காந்தியவர்களையும் அநேக தேச பக்தர் கள் என்பவர்களும், தேசிய வீரர்கள் என்பவர்களும் இப்போது வைகின்ற தையும் பார்க்கின்றோம். 

இவை ஒருபுறம் நடக்க இதே கூட்டத்தாரால் மற்றொரு புறத்தில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போமானால் சர்க்கார் தலைவரான ராஜப்பிரதிநிதி திரு இர்வின் பிரபுவைப் பாராட்டுவதும், அவரிடம் ராஜி பேசி முடிவு செய்து கொண்ட திரு. காந்தி அவர்களைப் புகழ்வதும், பகத்சிங்கைத் தூக்கிலிடக் கூடாது என்கின்ற நிபந்தனை இல்லாத ராஜி ஒப்பந்தத்தைப் பற்றி மிக்க திருப்தியடைந்திருப்பதோடல்லாமல் அதை ஒரு பெரிய வெற்றியாய்க் கருதி வெற்றிக் கொண்டாட்டங்கள் கொண்டாடுவதுமான காரியங்கள் நடைபெறு கின்றன. இவ்வளவோடு மாத்திரம் அல்லாமல் திரு. காந்தியவர்கள் திரு. இர்வின் பிரபுவை மகாத்மா என்று கூறி அந்தப்படியே அழைக்கும் பாடியாக தேச மகாஜனங்களுக்கும் கட்டளையிடுவதும், திரு. இர்வின் பிரபு அவர்கள் திரு. காந்தியவர்களை ஒரு பெரிய மகான் என்றும், தெய்வத்தன்மை பொருந்தியவர் என்றும். வெள்ளைக்காரர்கள் அறிய விளம்பரம் செய்வது மான காரியங்களும் நடைபெற்றன. 

ஆனால் இப்போது வெகு சீக்கிரத்தில் அதே மக்களால் "காந்தீயம் வீழ்க" "காங்கிரஸ் அழிக" "காந்தி ஒழிக” என்கின்ற கூச்சல்களும், திரு. காந்தி அவர்கள் செல்லுகின்ற பக்கம் கருப்புக் கொடிகளும், அவர் பேசும் கூட்டங்களில் குழப்பங்களும் ஏற்படுவதும் சகஜமாகி விட்டன. 

இவைகளை யெல்லாம் பார்க்கும் போது அரசியல் விஷயமாய் பொது ஜனங்களுடைய அபிப்பிராயம் என்ன கொள்கை என்ன என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாமல் இருப்பதோடு அப்படி ஏதாவது ஒரு கொள்கை யாருக்காவது உண்டா என்று சந்தேகிக்க வேண்டியதாகவு மிருக்கிறது. எது எப்படி இருந்த போதிலும் திரு. காந்தியவர்களின் உப்பு சத்தியாக்கிரகக் கிளர்ச்சி ஆரம்பித்த காலத்திலேயே இக்கிளர்ச்சி மக்களுக்கோ. தேசத்திற்கோ சிறிதும் பயன்படாது என்றும், பயன்படாமல் போவதோடல்லாமல் தேசத்தின் முற்போக்குக்கும், கஷ்டப்படும் மக்களின் விடுதலைக்கும் விரோதமானது என்றும் எவ்வளவோ தூரம் எடுத்துச்சொன்னோம். நாம் மாத்திரமல்லாமல் திரு. காந்தி யவர்களே இக்கிளர்ச்சி ஆரம்பிப்பதற்கு காரணமே பதக்சிங் போன்றவர்கள் செய்யுங்காரியங்களை கெடுப்பதற்கும். ஒழிப்பதற்குமே என்று கருத்துப்பட நன்றாய் வெளிப்படையாகவே எடுத்துச்சொல்வியு மிருக்கின்றார். போராக்குறைக்கு அக்கம் பக்கத்து தேசத்தவர்களில் உண்மை யான சமதர்மக்கொள்கையுடைய தேசத்தார்களும் திரு. “காந்தியவர்கள் ஏழைகளை வஞ்சித்துவிட்டார். சமதர்மக் கொள்கைகளை ஒழிக்கவே இக் காரியங்கள் செய்கின்றார். திரு. காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் அழிய வேண்டும்" என்று ஆகாயம் முட்டக் கூப்பாடு போட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனால் நமது தேசீயவீரர்கள் தேச பக்தர்கள் என்பவர்கள் ஒன்றையும் கவனியாமல் பலாபலனையும் உணராமல் விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றில் விழுவது போலவும், பந்தயங் கூறிக்கொண்டு பாறையில் முட்டிக் கொள்வது போலவும் தலை கிறுகிறுத்து கண் தெரியாமல் கூத்தாடி னார்கள். அதன் பயனாய் சிறை சென்று வீரர்களாய் “வாகைமாலை சூடி" திரும்பி வந்தார்கள். அதன் பெருமைகளையும் அடைந்துகொண்டார்கள். பிறகு இப்போது பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை பார்த்து விட்டு காந்தியம் வீழ்க" *காங்கிரஸ் அழிக""காந்தி ஒழிக" என்று கூப்பாடும் போடுகின்றார்கள். இதனால் என்ன பயன் ஏற்பட்டு விடும் என்பது நமக்கு விளங்கவில்லை . 

நிற்க, நம்மைப் பொருத்தவரை நாம் உண்மையைச் சொல்லவேண்டு மானால் பகத்சிங் அவர்கள் இந்த மாதிரி பொருப்பும், கவலையும் அற்ற மூடமக்களும், மட மக்களும் பலாபலனை எதிர்பாராமல் எப்படியாவது தங்களுக்கு கௌரவம் கிடைத்தால் போது மென்கின்ற சுயநல மக்களும் உள்ள நாட்டில் உயிருடன் வெகுகாலம் இருந்து கொண்டு இவர்களது நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு விநாடி தோறும் வேதனைப்பட்டு இவர்களது முட்டுக்கட்டைகளை அனுபவித்துக்கொண்டிருப்பதைப் பார்க் கிலும் அவர் தன் உயிரை விட்டு மறைய நேர்ந்தது. பகத்சிங்கிற்கு மெத்த *சாந்தி” என்றும், நன்மை என்றுமே கருதுகின்றோம். அந்தப் பேற்றை நாம் அடைய முடியவில்லையே என்றுதான் கவலைப்படு கின்றோம். 

ஏனெனில் ஒரு மனிதன் தன் கடமையைச் செய்தானா? இல்லையா? என்பது தான் கேள்வியே தவிர, பலன் என்ன ஆச்சுது என்பது இங்கு நமது கேள்வி அல்ல, ஆனாலும் காலமறிந்து, இடமறிந்து கடமையைச் செலுத்த வேண்டும் என்பதை நாம் ஒப்புக்கொள்ளுகின்றோமாயினும் பகத்சிங் கொள்கைக்கு காலமும், இடமும், நடப்பும் விரோதமாயில்லை என்றே சொல்லுவோம். ஆனால் அவர் தனது கொள்கையை நிறைவேற்றக் கைக் கொண்ட முறைகளில் சிறிது தவறு நேர்ந்து விட்டது என்பதாக நம் புத்திக்கு தோன்றிய போதிலும் அவரது கொள்கை குற்றமுடையது என்று சொல்ல நாம் ஒருக்காலும் துணியவே மாட்டோம். அதுவேதான் உலகத்தின் சாந்த நிலைக் கொள்கையாகும்.

நிற்க, உண்மையிலேயே பகத்சிங் அவர்கள் தனது கொள்கைகள் முழுவதையும் சரி என்று மனப்பூர்த்தியாய் நிச்சயித்துக் கொண்டு அதை நிறைவேற்ற அவர் நடந்து கொண்ட மாதிரிகள் தான் சரியான மார்க்கம் என்று அவர் முடிவும் செய்துகொண்டு இருப்பாரேயானால் கண்டிப்பாக அவர் நடந்து கொண்டபடியேதான் நடந்து இருக்க வேண்டியதென்று நாம் சொல்லுவதோடு அந்தப்படி அவர் நடக்காமல் இருந்திருந்தால் அவர் யோக்கியமான மனிதரென்று சொல்லமுடியாது என்றும் சொல்லுவோம். ஆதலால் இப்போது நாம் அவரை ஒரு உண்மையான மனிதர் என்று சொல்லு வோம். இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிரயமாகும். ஏனெனில் நாமறிந்தவரை திரு. பகத்சிங்கிற்கு சமதர்மமும், பொது உடமையும்தான் அவரது கொள்கை யென்று கருதி இருக்கின்றோம். இதற்கு உதாரணம் என்னவென்றால் திரு. பகத்சிங் பஞ்சாப் கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் கீழ்க்கண்ட வாக்கியம் காணப்படுகிறது. அதாவது : 

“பொதுஉடைமைக்கு அதிகாரம் பெற்று ஜனங்களுக்குள் வித்தியாசமான அந்தஸ்துகள் இல்லாமல் இருக்கும் வரை எங்கள் யுத்தம் நடந்து கொண்டுதானிருக்கும். எங்களைக் கொல்வதோடு இந்த யுத்தம் முடிந்து விடாது. அது பகிரங்கமாகவும் ரகசியமாகவும் நடந்துதான் தீரும்" என்று குறிப்பிட்டிருக்கிறார். அன்றியும் அவர் கடவுள் விஷயத் திலோ எல்லாம் கடவுள் செயல் என்பதிலோ நம்பிக்கை இல்லாத தன்னம் பிக்கையுடைவர் என்றும் கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆகவே இந்தக் கொள்கையானது எந்தச் சட்டத்தின் படியும் குற்றமாக்கக்கூடியது அல்ல வென்றும் ஆவதாயிருந்தாலும் கூட யாரும் பயப்பட வேண்டிய தில்லை பென்றும் சொல்லுவோம். ஏனென்றால் அதனால் பொது மக்களுக்கு எவ்வித நஷ்டமோ, கஷ்டமோ ஏற்பட்டு விடாது என்று உறுதி கொண்டிருக்கின்றோம். அந்தப்படி ஒரு சமயம் ஏதாவது ஏற்படுவதா யிருந்தாலும் நாம் நம் மனப் பூர்வமாய் யாதொரு தனிமனிதனிடமாவது தனிவகுப்பினிடமாவது தனி தேசத்தானிடமாவது துவேஷம் இல்லாமலும் எந்த தனிமனிதனுடைய திரேகத்திற்கும் துன்பமுண்டுபண்ணாமலும் நம்மை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கஷ்டப்படுத்திக்கொள்ளவும் சம்மதிக்கின்றதான தியாகத் தன்மையுடன் இருந்துகொண்டு அக்கொள்கையை நிறைவேற்ற முயற்சிக் கின்றோம். ஆதலால் நாம் எதற்கும் கவலைப்படவோ, பயப்படவோ வேண்டியதில்லை என்று சொல்லுகிறோம். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் சாதாரணமாக நாம் தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லுவதில் என்ன தத்துவம் அடங்கி இருக்கின்றதோ அதுதான் மக்களின் ஏழ்மைத்தன்மையை ஒழிய வேண்டும் என்பதிலும் அடங்கி இருகின்றது. 

தீண்டாமை ஒழிவதாய் இருந்தால் எப்படி மேல்ஜாதி கீழ்ஜாதி தத்துவம் அழிந்து தானாக வேண்டுமோ அது போலவேதான் ஏழ்மைத் தன்மை ஒழிவதாயிருந்தால் முதலாளித்தன்மை கூலிக்காரத்தன்மை ஒழிந்து தானாக வேண்டும். ஆகவே இந்தத் தன்மைகள் மறைப்படுவது தான் சமதர்மத்தன்மை பொது உடமைத்தன்மை என்பவைகளே ஒழிய வேறில்லை. இந்தக் கொள்கை கல் தான் திரு. பகத்சிங் போன்றவர்களின் கொள்கைகள் ஆதலால் இக் கொள்கைகளை நியாயமானவையென்றும் அவசியமானவை என்றும் கருதுகின்ற ஒருவன் காங்கிரஸ் ஒழிக! காந்தீயம் அழிகா என்று சொல்லுவதில் நமக்கு ஆச்சரியமோ, குற்றமோ ஒன்றுமே இல்லை. ஆனால் இந்தக் கொள்கைக்காரர்கள் காங்கிரசுக்கு ஜே. காந்திக்கு ஜே என்று சொல்லுவதுதான் நமக்கு மிக ஆச்சரியமாயிருக்கின்றது. திரு. காந்தியவர்கள் என்றையத்தினம் கடவுள் தான் தன்னை நடத்துகின்றார் என்றும் வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலான தென்றும் எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனியத்திற்கும், காந்தியத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதிவிட்டோம். ஆனால் அந்த உண்மை இன்றுதான் மக்களில் சிலராவது கண்டுபிடித்து காந்தியம் அழிக என்று சொல்லத்தக்க அறிவையும் துணிவையும் அடைந்திருக்கின்றார்கள். இது நமது கொள்கைகளுக்கு ஒரு பெரிய வெற்றியேயாகும். திரு. பகத்சிங் தூக்கி விடப்பட்டு உயிர்துறந்திருக்காவிட்டால் இந்த வெற்றி இவ்வளவு பிரபலத்தில் ஏற்படுத்துவதற்கு ஆதாரமே இருந்திருக்காது. அன்றியும் பகத்சிங்கை தூக்காமல் இருந்திருந்தால் காந்தியத்திற்கும் இன்னமும் ஆக்கம் ஏற்பட்டு இருக்கும் என்று கூடச் சொல்லுவோம். சும்மா தானாகவே நோய்கொண்டு அவஸ்தைப்பட்டு செத்துச் சாம்பலாகி இருக்க வேண்டிய பகத்சிங்குக்கு இந்தியமக்களுக்கு. ஏன் உலகமக்களுக்கே உண்மையான சமத்துவமும், சாந்தியும் அளிக்கத்தக்க பாதையைக் காட்டுவதற்கு பயன்படத்தக்கதாய் தனது உயிரைவிட நேர்ந்தது சாதாரணத்தில் வேறுயாரும் அடைய முடியாத பெரும்பேறு என்றே சொல்லி பகத்சிங்கை மனமார. வாயார, கையார பாராட்டுகின்றோம்! பாராட்டுகின்றோம். பாராட்டுகின்றோம். இதே சமயத் தில் நமது அரசாங்கத்தாரையும் இனியும் இப்படிப்பட்ட உண்மையான எண்ணமுடையவர்களாகப் பார்த்து மாகாணத்திற்கு 4பேர் வீதமாவது தூக்கிலிட வேண்டுமென்றும் மனமார வேண்டுகிறோம். 

குடி அரசு - தலையங்கம் - 29.03.1931

 
Read 42 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.